< Back
மாநில செய்திகள்
அரையாண்டு விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

அரையாண்டு விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை

தினத்தந்தி
|
30 Dec 2022 9:39 PM IST

அரையாண்டு விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 4 நாட்களில் 50 ஆயிரம் பேர் வருகை தந்தனர். ஷவரில் குளிக்கும் மனித குரங்குகள், யானைகளை குழந்தைகள் பார்த்து ரசித்தனர்.

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியை ஒட்டியுள்ள காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் பூங்காவுக்கு வருகை தந்து பூங்காவில் உள்ள சிங்கம், வெள்ளை புலி, சிறுத்தை, காண்டாமிருகம், நீர்யானை மற்றும் பறவைகள் போன்றவற்றை பார்த்தனர்.

மேலும் பூங்காவில் உள்ள மனித குரங்குகள், 2 யானைகள் ஷவரில் குளிக்கும் காட்சிகளை சிறுவர்களும், பெரியோர்களும் ரசித்து பார்த்து மகிழ்ந்தனர். மேலும் பூங்காவில் உள்ள ஆதித்யா என்ற குட்டி மனித குரங்கு செய்யும் சேட்டைகள் பூங்காவுக்கு வந்த சிறுவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏராளமானோர் வருகை தந்தனர்.

குறிப்பாக நேற்று முன்தினம் வண்டலூர் பூங்காவுக்கு 17 ஆயிரத்து 500 பேர் வந்து சுற்றி பார்த்தனர். நேற்று 17 ஆயிரம் பேர் சுற்றி பார்த்துள்ளனர். வழக்கமாக செவ்வாய்க்கிழமைகளில் பூங்கா விடுமுறை தினமாகும் ஆனால் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை பூங்கா பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினத்தில் பூங்காவை 6 ஆயிரத்து 500 பேர் சுற்றி பார்க்க வருகை தந்தனர். கடந்த திங்கட்கிழமை 9 ஆயிரத்துக்கும் அதிக மாேனார் வருகை தந்தனர். இதனால் கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 50 ஆயிரத்துக்கும் அதிக மானோர் வருகை தந்தனர். இதனால் பூங்கா நுழைவுவாயில் உள்பட பூங்காவில் எங்கு பார்த்தாலும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பூங்காவுக்கு வருகை தரும் பொதுமக்கள் யாரும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடிக்காமல் முக கவசம் அணியாமலம் பூங்காவை சுற்றி பார்க்கின்றனர்.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு பூங்கா ஊழியர்கள் கொரோனா வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடிக்கும்படி அடிக்கடி ஒலிபெருக்கி மூலம் அறிவித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் எந்த விதமான வழிகாட்டி நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் அலட்சியத்தோடு பூங்காவை சுற்றி பார்த்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு பகுதியில் இருந்து பூங்காவுக்கு வரும் பொது மக்களால் கொரோனா தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு பூங்காவை சுற்றி பார்க்க வரும் பொது மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்