திருச்சி
கோர்ட்டு ஊழியர் வீட்டில் 50 பவுன் நகைகள்-ரூ.30 ஆயிரம் கொள்ளை
|கோர்ட்டு ஊழியர் வீட்டில் 50 பவுன் நகைகள்-ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு ஊழியர்
திருச்சி கருமண்டபம், அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 58). இவர் திருச்சி கண்டோன்மெண்ட் பறவைகள் சாலை பகுதியில் பழைய கார்களை பழுது பார்க்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
இவருடைய மகன் எட்வின் தாமஸ் (30). இவரது மனைவி பவித்ரா (26). இவர்கள் திருச்சி கோர்ட்டில் அலுவலக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். சகாயராஜின் மகளுக்கு திருமணமாகி, திருச்சி துவாக்குடி பகுதியில் வசித்து வருகிறார்.
50 பவுன் நகை கொள்ளை
இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று காலை சகாயராஜ் துவாக்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். இவரது மருமகள் பவித்ரா வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் இரவு 7.30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து சகாயராஜுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த சகாயராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் உதவி கமிஷனர் கென்னடி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பட்டப்பகலில் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, இந்த கொள்ளை சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியது தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் அங்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள், வீட்டில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.