< Back
மாநில செய்திகள்
சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.60 லட்சம் கொள்ளை
சென்னை
மாநில செய்திகள்

சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.60 லட்சம் கொள்ளை

தினத்தந்தி
|
19 Sept 2023 12:16 PM IST

சென்னை அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை, ரூ.60 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சென்னை அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், விட்டல் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 40). திருமணம் ஆகாத இவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இவர், அம்பத்தூர் மற்றும் திருமுல்லைவாயல் பகுதியில் 2 மதுபான பார்களை நடத்தி வருகிறார்.

ராஜேஷ் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சாவூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு மற்றும் மரக்கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 50 பவுன் நகை, ரூ.60 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து ராஜேஷ் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல் பழைய வண்ணாரப்பேட்டை சஜ்ஜா முனுசாமி 3-வது தெருவில் வசித்து வருபவர் மெஹ்ராஜளி. பிஸ்கட் வியாபாரியான இவர் கடந்த 6 மாதங்களாக இங்கு குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு பல்லாவரத்தில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக குடும்பத்துடன் சென்றுவிட்டார். பின்னர் இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் மற்றும் 2 வெள்ளி கொலுசுகளை திருடிச்சென்று விட்டது தெரிந்தது..

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்