காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம்
|சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஜவுளி பூங்காக்கள்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க முன் வரும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலந்தாலோசனை கூட்டம்
தமிழ்நாடு அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை- 2019ன் படி குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி திட்டத்தை காஞ்சீபுரம் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்ய ஏதுவாக முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் 22-ந்தேதி மாலை 4 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.