கோயம்புத்தூர்
புதிதாக 50 கண்காணிப்பு கேமராக்கள்
|பொள்ளாச்சி நகரில், குற்றங்களை தடுக்க புதிதாக 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி நகரில், குற்றங்களை தடுக்க புதிதாக 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
பொள்ளாச்சி நகரில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து விதி மீறில் மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த போலீஸ் சார்பில் காந்தி சிலை, பஸ் நிலையம், கடைவீதி, கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
இதில் பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் உள்ள மத்திய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அங்குள்ள ஒரு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து போலீசார் கண்காணித்து வந்தனர். ஆனால் நாளடைவில் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி செயல்பாட்டில் இல்லாமல் போனது.
பஸ் நிலைய பகுதி
இந்த நிலையில் பொள்ளாச்சி நகரில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியான மத்திய பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் போக்குவரத்து விதி மீறல் மற்றும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பஸ் நிலைய பகுதி மட்டுமின்றி நடைபாதை, காந்தி சிலை, தேர்நிலை திடல், நியூஸ்கீம ்ரோடு, கோவை ரோடு, திருவள்ளுவர் திடல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
இதில் முதற்கட்டமாக கிராமப்புறங்களுக்கும், வால்பாறை மற்றும் கேரள பகுதிக்கும் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியான புதிய பஸ் நிலையத்தை சுற்றிலும் 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.
கட்டுப்பாட்டு மையம்
இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க அங்குள்ள ஒரு அறையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு பணியின் முன்னோட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக மத்திய பஸ் நிலைய பகுதி, சுரங்க நடைபாதை மற்றும் நகரில் வாகன போக்குவரத்து, மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் நகர் பகுதி கண்காணிப்பில் இருப்பதுடன் விதிமீறல் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது உடனுக்குடன் தடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.