செங்கல்பட்டு
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.50 லட்சம் நிலம் மீட்பு
|மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை தேவனேரியில் ரூ.50 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தேவனேரி கடல் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த சிலர் மற்றொரு நிலத்தின் சர்வே எண்ணை கொண்டு போலியாக ஆவணம் தயாரித்து தேவனேரியில் தெற்கு பக்கம் 40 சென்ட் கடற்கரை பகுதியை கடந்த 2008-ம் ஆண்டு குறைந்த விலைக்கு விற்றுள்ளனர்.
கடற்கரை பகுதியை வாங்கிய தனியார் நபர் அங்கு சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், சிறிய அறை அமைத்து கம்பிவேலி மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தும் ஆக்கிரமித்ததாக கூறப்பட்டது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துக்கு புகார்கள் வந்தது இதையடுத்து கடல் பகுதி ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினருக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ரூ.50 லட்சம் மதிப்பிலான 40 சென்ட் அளவுள்ள கடற்கரை பகுதி மீட்கப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது தனியார் ஆக்கிரமிப்பு நபர்கள் மூலம் பிரச்சினைகள் வராத வண்ணம் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் தேவனேரி கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருக்கழுக்குன்றம் தாசில்தார் பிரபாகரன் இதுகுறித்து கூறும்போது:-
கடல்பகுதி என்பது அரசுக்கு சொந்தமான பகுதியாகும். இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழக அரசு உத்தரவின்பேரில் இந்த கடல்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடல்பகுதி ஆக்கிரமிப்பு அகற்றும்போது மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ரகு, மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் முனுசாமி, மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இருந்தனர்.