சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ.50 லட்சம் மோசடி - 4 பேர் கைது
|சிபிஐ அதிகாரி போல் நடித்து, நபர் ஒருவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
மேற்கு தாம்பரம் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரை தொடர்புகொண்ட மர்மகும்பல், தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி மிரட்டியுள்ளனர். அப்போது, சுரேஷ்குமாரின் தெலைபேசி எண்ணில் இருந்து பெண்களை கொடுமைப்படுத்தும் விதமாக குறுஞ்செய்திகள் மற்றும் விளம்பரங்கள் செய்துள்ளதாகவும், இதனால் மும்பை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க, 50 லட்சம் ரூபாய் பணத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என அந்த கும்பல் மிரட்டவே, அதனை நம்பி அவர் பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுதொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், பணம் செலுத்திய வங்கிக் கணக்கை வைத்து, மோசடி நபர்கள் கேரளாவில் இருப்பதை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து கேரளா விரைந்த தனிப்படை போலீசார், மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட அஃப்ரிட், வினிஷ், முனீர், ஃபஸ்லுர் ரஹ்மான் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.