திருநெல்வேலி
ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு ஜெயில்
|ஆலய ஊழியரை அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு ஜெயில்- நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
நெல்லை மாவட்டம் மானூர் நாஞ்சான்குளத்தை சேர்ந்தவர் ஆல்பர்ட் ஆசீர்வாதம் (வயது 78). இவர் நாஞ்சான்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் வேலை செய்து வந்தார். இவரிடம் நாஞ்சான்குளம் பகுதியை சேர்ந்த டிரைவர் சாமுவேல் அகஸ்டின் (59) என்பவர் கிறிஸ்தவ ஆலயத்திற்குள் சென்று தகராறு செய்தது சம்பந்தமாக ஆல்பர்ட் ஆசீர்வாதம் மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த முன்விரோதம் காரணமாக நாஞ்சான்குளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நின்று கொண்டிருந்த ஆல்பர்ட் ஆசீர்வாதத்தை சாமுவேல் அகஸ்டின் அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் அகஸ்டினை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ்குமார் நேற்று சாமுவேல் அகஸ்டினுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.