சென்னை
கீழ்ப்பாக்கம் வணிக வளாகத்தில் இரும்பு கதவு விழுந்து சிறுமி பலி; காவலாளி, துணிக்கடை மேலாளர் கைது
|கீழ்ப்பாக்கம் வணிக வளாகத்தில் இரும்பு கதவு விழுந்து சிறுமி பலியானது தொடர்பாக காவலாளியும், துணிக்கடை மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
வணிக வளாகம்
சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரம் பரகாரோடு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர், கீழ்ப்பாக்கம் ஹார்லிக்ஸ் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த கட்டிடத்தில் உள்ள தனியார் துணிக்கடைக்கு சொந்தமான அடுக்குமாடி வாகன நிறுத்தும் வசதியும் வணிக வளாகத்தில் செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகன நிறுத்துமிடத்தில் தான் சங்கர் வேலை பார்த்து வருகிறார். துணிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்று விடுவது, பின்பு அந்த கார்களை அங்கிருந்து எடுத்து வந்து வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் சங்கருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இரும்பு கதவு விழுந்தது
தினமும் வேலை முடிந்ததும் சங்கரை அழைத்துச்செல்ல அவரது மனைவி வாணி, வணிக வளாகத்துக்கு வருவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு சங்கரை அழைத்துச்செல்ல அவருடைய மனைவி, மகள் ஹரிணியுடன் (வயது 5) வந்திருந்தார். சங்கரின் வரவுக்காக இருவரும் வணிக வளாகத்தின் இரும்பு கதவு அருகே காத்திருந்தனர். அப்போது வணிக வளாகத்தின் பாதுகாவலரான சம்பத் கதவை பூட்ட முயற்சிக்கும்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கதவு கீழே விழுந்தது. இதனால் கதவு அருகே இருந்த ஹரிணிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை சற்றும் எதிர்பார்க்காத தாய் வாணி கதறி கூச்சல் போட்டார். வாணியின் கதறல் கேட்டு சங்கரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஹரிணி சேர்க்கப்பட்டார்.
காவலாளி கைது
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிணி, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். மகள் இறந்த செய்தி அறிந்ததும் சங்கர் மற்றும் வாணி இருவரும் கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது. இரும்பு கதவு விழுந்து 5 வயது சிறுமி இறந்த செய்தி அந்த பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இரும்பு கதவு திடீரென எப்படி விழுந்தது? என வணிக வளாக பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக துணிக்கடை மேலாளர் சீனிவாசன் மற்றும் வணிக வளாக காவலாளி சம்பத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.