< Back
மாநில செய்திகள்
கல்பாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தால் 5 கிராம மக்கள் பாதிப்பு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கல்பாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தால் 5 கிராம மக்கள் பாதிப்பு

தினத்தந்தி
|
15 Dec 2022 1:50 PM IST

கல்பாக்கம் அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறு பாலத்தால் 5 கிராம மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. பக்கிங்காம் கால்வாயில் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு பகுதியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பகுதியில் உள்ள கொடங்கனேரி கால்வாயின் இடையே கடக்கும் பாதையில் 2009-ம் ஆண்டு கட்டப்பட்ட சிறிய பாலம் அதிவேகத்தில் சென்ற மழைநீரால் பாதிப்புக்குள்ளாகி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலம் வழியாக செல்லும் வெள்ளம் உய்யாலிகுப்பம் பக்கிங்காம் கால்வாயை கடந்து அந்த வழியாக சென்று கடலில் கலக்கிறது.

பாலம் துண்டிக்கப்பட்டதால் அருகாமையில் உள்ள ஐந்துகாணி, காரைத்திட்டு, உய்யாலிகுப்பம், வாயலூர், சின்னகாலனி, இருளர் காலனி என 5 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லமுடியாமல் ஒரு தீவில் வசிப்பது போல் பரிதவித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த பகுதியில் கூலி வேலைக்கு செல்லும் பழங்குடி இருளர்கள், நலிவடைந்த தலித் மக்கள், முஸ்லிம்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த 5 கிராமங்களில் உள்ள மாணவ- மாணவிகள் துண்டிக்கப்பட்ட இந்த சாலை வழியாகத்தான் கல்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். இந்த பாலம் துண்டிப்பால் இந்த பகுதி மாணவ- மாணவிகள் பள்ளி்ளுக்கு செல்லமுடியாமல் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல் இரு சக்கர வாகனங்களும் செல்ல முடியாததால் இந்த வழியாக கிழக்கு கடற்கரை சாலையை கடந்து கல்பாக்கம் பகுதியில் உள்ள கடை வீதிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு இந்த பகுதி மக்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் காரைத்திட்டு பகுதியில் துண்டிக்கப்பட்ட சிறு பாலத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்