கடலூர்
சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
|புதுப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
புதுப்பேட்டை,
5 டன் ரேஷன் அரிசி
புதுப்பேட்டை அடுத்த சிறுகிராமம் பகுதியில் ஒரு வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வாளர் ஜெரால்ட் ராபின்சன் தலைமையில் போலீசார் பாண்டியன், குணசீலன், விஜய் ஆகியோர் சிறுகிராமம் பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிரைவர் கைது
இதையடுத்து சரக்கு வாகன டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ் நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் சரவணன் (வயது 34) என்பதும், சிறுகிராமத்தில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், 5 டன் ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.