திருவாரூர்
5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
|திருவாரூர் பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முறை வைக்காமல் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறுவை நெல் சாகுபடி
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தரையோடு தரையாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீர் வாய்க்காலில் பாய்ந்தால் மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும் என்ற நிலையில் திருவாரூர் அருகே மாங்குடி கல்யாணமாதேவி, வடகரை, சேந்தனாங்குடி, தென்னவராயநல்லூர், திருநெய்பேர் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல்சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நெற்பயிர்கள் கருகும் அபாயம்
பாண்டவையாற்றில் தண்ணீர் குறைந்த அளவு செல்வதால் அதிலிருந்து பிரியும் பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வயல்களில் தண்ணீர் இல்லாமல் விளைநிலங்கள் வெடித்து வறண்டு காணப்படுகிறது.
முறைவைக்காமல் கூடுதல் தண்ணீர்
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில்,
இன்னும் ஓரிரு நாட்களில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சவில்லை என்றால் பயிர்கள் முற்றிலும் கருகி அழிந்து விடும். உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாண்டவையாற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விட்டு பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். இதுவரை ஒரு ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் செலவு செய்துள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் ஆறுகளில் முறை வைக்காமல் கூடுதல் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றனர்.