திருவள்ளூர்
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.45 கோடியில் 5 மாடி கட்டிட பணிகள் தீவிரம்
|திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.45 கோடியில் 5 மாடி கட்டிட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஆறுமுக சாமி கோவில் தெருவில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் காய்ச்சல், சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதேபோல் உள்நோயாளிகளாக விபத்தில் காயம் அடைந்தவர்கள் அதிக அளவு அரசு ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.
இது தவிர, கர்ப்பிணியருக்கு சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் பார்க்கப்படுகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட படுக்கை அறைகள் உள்ளன. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. இதனால் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருவள்ளூரில் மாவட்ட மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்ட பின்னர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு இறுதியில் திருத்தணி அரசு ஆஸ்பத்திரி, மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்துவதற்கு அரசாணை பிறப்பித்தது. தேசிய சுகாதார இயக்ககம் வாயிலாக, தரைத்தளம் மற்றும் அதன் மீது 4 அடுக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டது. தற்போது திருத்தணி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 அடுக்கு கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது அடித்தளம் அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகின்றன. ஆஸ்பத்திரியின் கட்டுமான பணிகள் 15 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய கட்டிடத்தில் 3 அறுவை சிகிச்சை அறைகள், சி.டி. ஸ்கேன் அறை, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அறை, புறநோயாளி பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி மையம், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறைகள் உள்பட பல்வேறு அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த புதிய ஆஸ்பத்திரி கட்டி முடிக்கப்பட்ட பின்னர் அனைத்து அறுவை சிகிச்சைகளும் இந்த ஆஸ்பத்திரியிலேயே செய்யப்படும். இதனால் திருத்தணி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் பெரிதும் பயன் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.