மார்த்தாண்டம் நகை கொள்ளை வழக்கு - கொள்ளையனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
|மார்த்தாண்டத்தில் 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கொள்ளையனை பிடிக்க 3 போலீஸ் இன்ஸ்பெக்டர் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ஊரைச் சேர்ந்த ராஜ செல்வின் ராஜ் என்பவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. காம்ப்ளக்ஸில் ஒரு நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவர் தனது கடையை திறக்கச் சென்றார். அப்போது கடையின் ஷட்டரில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் உயர்ந்து காணப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது கடைக்குள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 62 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு சென்றிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து ராஜ செல்வின் ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தடயவியல் நிபுணர்களும் கொள்ளையடிக்கப்பட்ட நகை கடையில் வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் உன்னைப்போன நகை கடைக்கு எதிர்புறம் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விசாரணை நடத்தினார்கள். அந்த சி.சி.டி.வி. கேமரா கொள்ளை நடந்த கடைக்கு சிறிது தூரத்துக்கு அப்பால் இருந்ததால் கொள்ளையன் குறித்து சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த சி.சி.டி.வி. கேமராவில் ஒரு அடையாளம் தெரியாத உருவம் மட்டும் கடையை நோக்கி செல்வதாகவும் அந்த உருவம் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் தெரிய வந்துள்ளது. ஆனால் அந்த கொள்ளையனின் உருவமோ முகச் சாயலோ தெளிவாக தெரியவில்லை. அதனால் சம்பந்தப்பட்ட கொள்ளையனை சரியாக அடையாளம் தெரிய போலீசாரால் முடியவில்லை.
இந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் உள்பட 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 5 தனிப்படை போலீஸ்சாரை இந்த கொள்ளை சம்பவத்தை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்த கொள்ளையனை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.