< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் உள்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் உள்பட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

தினத்தந்தி
|
27 Aug 2022 4:42 AM IST

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம சாவு வழக்கில் கைதான பள்ளித் தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். அதையடுத்து பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 5 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதையடுத்து ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.

தொடர்பு இல்லை

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 5 பேரையும் கைது செய்ததற்கான காரணத்தை கூறவில்லை என்றால், விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும் என்று நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை ஆசிரியர் சிவசங்கரன் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.தங்கசிவம், 'மனுதாரருக்கும், இந்த சம்பவத்துக்கும் தொடர்பு எதுவும் இல்லை. அவர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரைதான் பள்ளியில் இருப்பார். ஆனால், மாணவி இரவில் இறந்துள்ளார். அதற்கும், மனுதாரருக்கும் சம்பந்தம் இல்லை' என்று வாதிட்டார். அதேபோல, பிற மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் வாதிட்டனர்.

தற்கொலைகள்

அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநில அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, 'முதலில் இந்த வழக்கு சந்தேக மரணம் என்றும், பின்னர் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் தற்கொலை கடிதம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்கக்கூடும். பள்ளித் தாளாளர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல இதே பள்ளியில் ஏற்கனவே 2 தற்கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றை மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் எந்த முரண்பாடும் இல்லை என ஜிப்மர் ஆஸ்பத்திரி நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையோ, கொலையோ இல்லை என்றாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் கொலை வழக்காக மாற்றவும் போலீசார் தயங்க மாட்டார்கள்' என்று வாதிட்டார்.

நிபந்தனை ஜாமீன்

மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, முதல் பிரேத பரிசோதனைக்கும், இரண்டாவது பிரேத பரிசோதனைக்கும் முரண்பாடு உள்ளது. பள்ளித் தாளாளரின் மகன்கள் இதுவரையிலும் கைது செய்யப்படவில்லை என்பதால் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பள்ளித் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்