15 வயது சிறுமியை மதுகுடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் - காரைக்குடியில் பரபரப்பு
|பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றபோது சூர்யா (வயது 19), நிஷாந்த் (20) ஆகிய 2 வாலிபர்கள் அந்த சிறுமியிடம் அறிமுகமாகி உள்ளனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைத்தளங்களிலும் அவர்கள் தகவல் பரிமாறி வந்துள்ளனர்.
நாளடைவில் அந்த சிறுமியும், சூர்யாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சமீபத்தில் இரவு 8 மணி அளவில் சிறுமி, கடைக்கு சென்றுவிட்டு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டுச்சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 2 நாட்கள் கழித்து காலையில் வீடு திரும்பியுள்ளார். அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, பதில் எதுவும் சொல்லாமல் தனக்கு மயக்கமாக வருகிறது என்று கூறி படுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து எழுந்த சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது, தன்னை காதலன் சூர்யா ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்றார். அங்கு கட்டாயப்படுத்தி மது குடிக்கச்செய்தார். பிறகு வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். அத்துடன் விடாமல் தனது நண்பர் நிஷாந்தை வரவழைத்தார். அவரும், அவருடைய நண்பர்கள் 3 பேரும் அங்கு வந்தனர். அவர்களும் என்னை பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டினர் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து காரைக்குடி மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சூர்யா, நிஷாந்த் உள்ளிட்ட 5 பேர் மீது சிறுமியை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்த சிலர், சூர்யா, நிஷாந்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் பகுதிக்கு வரவழைத்தனர். அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அந்த வாலிபர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகவல் அறிந்ததும், ஆஸ்பத்திரிக்கு சென்று சூர்யா, நிஷாந்த் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் சிறுமி பலாத்கார சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடினர். வினோத்குமார் (20), வேலு (20) உள்பட மேலும் 3 வாலிபர்களும் பிடிபட்டனர். இதே போல் இந்த விவகாரத்தில் இன்னொருவரும் சிக்கி இருக்கிறார்.
முதற்கட்ட விசாரணையில், சிறுமியை 34 மணி நேரம் தங்களது கட்டுப்பாட்டில் இந்த கும்பல் வைத்திருந்ததும், காட்டுப்பகுதியில் இருந்து மேலும் 2 இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதும், வேலைக்காக வெளியூர் சென்ற அவர்களை பிடித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என போலீசார் தெரிவித்து உள்ளனர். நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் வினோத்குமார், வேலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைதான 4 பேரையும், பிடிபட்ட மற்றொருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.