திருவள்ளூர்
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து 5 பேர் படுகாயம்
|திருத்தணி அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது மனைவி ராணி (38), மகள்கள் தேஜஸ்வரி (13), ஸ்ரீலேகா (11), திருச்செல்வன் (8) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருத்தணி அடுத்த சரஸ்வதிநகரில் உள்ள உறவினர் வீட்டின் புதுமனை புகுவிழாவில் பங்கேற்று உள்ளார்.
இந்த நிலையில் விழா முடிந்ததும் பின்னர் வெங்கடேசன் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டில் உள்ள வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். திருத்தணி காட்ரோடு பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது நிலைத்தடுமாறி வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரக்கோணம் முன்னாள் எம்பி., திருத்தணி கோ.அரி படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.