< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் - பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

தினத்தந்தி
|
26 March 2023 11:53 AM GMT

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தென்முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 30), ராஜா (37) ஆகியோர் நேற்று மாலை அல்லப்பனூர் செல்லும் சாலையில் குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் காவலில் வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் அவர்களின் உறவினரான தென் முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாவட்ட துணைத் தலைவரும் அம்பேத்கர் சமூகப் புரட்சி படை நிறுவனமான குபேந்திரன் (55) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி சாந்தி, வெங்கடேசன் மனைவி நிஷாந்தி, தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, தங்கராஜ், தங்கராஜ் மகன் லோகேஷ், சுந்தர், தங்கராஜ் மனைவி உஷா, முத்துவேல், சத்தியசீலன் மற்றும் சிலர் போலீஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

அங்கு பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசாரை அவர்கள் தரக்குறைவாக பேசி உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களையும் வெளியே விடவில்லை என்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி அரசு பணி செய்ய விடாமல் தடுப்பது, தரக்குறைவாக பேசியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி குபேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஏழுமலை, முத்துவேல், தங்கராஜ், பிரகாஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்