சென்னை
பட்டா கத்தியால் ஊழியர்களை வெட்டி 1½ கிலோ நகை கொள்ளை வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது - 100 பவுன் பறிமுதல்
|பட்டா கத்தியால் ஊழியர்களை தாக்கி 1½ கிலோ நகை கொள்ளை அடித்த வழக்கில் வங்கி ஊழியர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 100 பவுன் பறிமுதல் செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால் (வயது 43). தங்க நகைகள் செய்து விற்பனை செய்யும் தொழில் அதிபர். இவர் சென்னை நெற்குன்றத்தில் தங்க நகைகளை செய்யும் கடை ஒன்றையும், அடகு கடையையும் நடத்தி வருகிறார். மேலும், தங்க நகைகளை செய்து சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு தங்களது ஊழியர்கள் மூலம் சப்ளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ராமேஸ்வர்லால் கடையில் வேலை செய்யும் சோகன் (23), காலுராம் (30) ஆகியோர் கடந்த 20-ந்தேதி காலை நகைகளை சப்ளை செய்ய நெற்குன்றத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர்.
அப்போது தாமரைப்பாக்கம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மாகரல்- காரணி கிராமத்துக்கு இடையே வரும் போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அவர்களை வழிமறித்து பட்டா கத்தியால் வெட்டி ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தையும், 1,400 கிராம் (175 பவுன்) தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் கொள்ளையர்கள் நகை சப்ளை செய்யும் ஊழியர்களை கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருநின்றவூர் பாக்கம் பகுதியை சேர்ந்த கமல்கிஷோர் (31) மற்றும் இவரது நண்பர்களான தமிழ்மணி (28), பாலாஜி (29), சுகுமார் (26), கிளிடாஸ் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாக்கம் கிராமத்தில் நகை கடை நடத்தி வருபவர் சுனில் கடைக்கு ராமேஸ்வர்லால் அவரது ஊழியர்கள் மூலம் தங்க நகைகளை சப்ளை செய்து வரும் நிலையில் அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க நகை கடைகாரர் சுனில் மகனான கமல் கிஷோர் தனது நண்பர்களுடன் 2 வருடமாக திட்டமிட்டது தெரிய வந்தது.
கொள்ளை முயற்சி பல முறை தோல்வி அடைந்த நிலையில் கடந்த 20-ந் தேதி நகை சப்ளை செய்யும் ஊழியர்களை பட்டா கத்தியால் தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து 820 கிராம் தங்க நகைகளையும், கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கமல் கிஷோர் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.