< Back
மாநில செய்திகள்
சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரம் - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
மாநில செய்திகள்

சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரம் - உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
5 July 2023 4:24 AM GMT

சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை,

கோவை சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன், திட்ட மேலாளர் சாதிக் குல் அமீர், என்ஜினீயர் அருணாச்சலம் ஆகிய 3 பேர் மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலைக்கு பணி அமர்த்துதல், கொலை குற்றம் ஆகாத மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கின் முழுவிவரம்:-

கோவையை அடுத்த குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதி அருகே சுற்றுச்சுவர் உள்ளது. இந்த சுவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இது வலுவிழந்து விட்டதால், அதனையொட்டி 5 அடி தூரத்தில் கான்கிரீட்டால் ஆன மற்றொரு சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த சில வாரங்களாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணியை சீனிவாசா கட்டுமான நிறுவனம் எடுத்து செய்து வந்தது. சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஆந்திராவை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர். நேற்று ஆந்திராவை சேர்ந்த கொல்லி ஜெகநாதன் (வயது53), நக்கிலா சத்யம் (48), ரப்பாகா கண்ணையா (49), மேற்கு வங்கத்தை சேர்ந்த பிஸ்கோஸ் (40), பருண் கோஸ் (35) ஆகியோர் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்காக அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்றவர்கள் கல்லூரி வளாகத்தில் புதிதாக கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மாலையில் திடீரென பயங்கர சத்தத்துடன், புதிதாக கட்டப்பட்டு வரும் சுவரின் அருகே இருந்த பழைய சுற்றுச்சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதில் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களும் சிக்கி கொண்டனர். அவர்கள் முழுமையாக இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால் வெளியில் வர முடியாமல் தவித்தனர். சக தொழிலாளர்களும், மக்களும் இணைந்து, இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொல்லி ஜெகநாதன், நக்கிலா சத்யம், ரப்பாகா கண்ணையா, பிஸ்கோஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர். பருன்கோஸ் மட்டும் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இறந்தவர்களின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க வைத்தது. சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்களும் சுவர் இடிந்து பலியான சம்பவம் சக தொழிலாளர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் செய்திகள்