வீடுபுகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை: சிவகங்கையில் பரபரப்பு
|வீடு புகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன..
காளையார்கோவில்,
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள கல்லுவழி கிராமத்தை சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய தந்தை சின்னப்பன்(வயது 67), தாய் உபகாரமேரி (65), பாரியின் மனைவி அரசி(35), மகள் ஜெர்லின்(14), மகன் ஜோபின்(10) ஆகியோர் கல்லுவழியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று அதிகாலையில் மர்ம நபர்கள் அவர்களுடைய வீட்டிற்குள் புகுந்து தூங்கி கொண்டிருந்த 5 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் காளையார்கோவில் பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு சிபிசாய் சவுந்தர்யன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.