< Back
மாநில செய்திகள்
அரும்பாக்கத்தில் நகை வியாபாரியிடம் ரூ.29 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

அரும்பாக்கத்தில் நகை வியாபாரியிடம் ரூ.29 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது

தினத்தந்தி
|
17 March 2023 1:07 PM IST

அரும்பாக்கத்தில் நகை வியாபாரியிடம் ரூ.29 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட நகை கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ஜெயின். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், நகை கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தங்கத்தை உருக்கி அதற்கு ஏற்ற டிசைனில் நகைகள் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்.

கடந்த 3 நாட்களுக்கு காஞ்சீபுரத்தில் உள்ள கடையில் நகைகளை கொடுத்து விட்டு ரூ.29 லட்சம் மதிப்புள்ள 420 கிராம் நகை மற்றும் ரூ.6 லட்சத்து 25 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு பஸ்சில் சென்னை கோயம்பேடு வந்தார். அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அரும்பாக்கம் அருகே வந்தபோது மர்ம நபர்கள் அவர் மீது மோட்டார் சைக்கிளை மோதி கீழே தள்ளினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.29 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இந்த புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக காஞ்சீபுரத்தை சேர்ந்த காலிஷா (வயது 22), ஆரிப் முஸ்டாகிம் (22), அப்துல் அமீது (21), ரஞ்சித் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 1 கிலோ 677 கிராம் தங்க நகைகள், ரூ.4 லட்சம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அரும்பாக்கம் போலீஸ் நிலைய வளாகத்தில் வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அன்பு நிருபர்களிடம் கூறியதாவது:-

நகை வியாபாரி ராஜேஷ்குமார் ஜெயினை கொள்ளையர்கள் கடந்த ஒரு மாதமாக பின்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை நோட்டமிட்டு உள்ளனர். அவர் பெரும்பாலும் சென்னையில் நகை வியாபாரிகள் கொடுக்கும் கணக்கில் வராத தங்கத்தை கொண்டு சென்று வியாபாரம் நடத்தி வருவதை தெரிந்து கொண்டனர்.

எனவே கணக்கில் வராத அந்த நகைகளை கொள்ளையடித்தால் போலீசில் புகார் செய்யமாட்டார் என்பதால் அவரை காஞ்சீபுரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து, அரும்பாக்கம் சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் அவர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி அவரிடம் கொள்ளையடித்து உள்ளனர்.

மேலும் ராஜேஷ்குமார் ஜெயின் தனது புகாரில் 430 கிராம் தங்க நகை மற்றும் ரூ.7 லட்சம் பணம் கொள்ளை போனதாக முதலில் தெரிவித்திருந்தார். ஆனால் கைதானவர்களிடம் இருந்து ஒரு கிலோ 677 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ராஜேஷ்குமார் ஜெயின் காஞ்சீபுரத்தில் வழக்கமாக நகைகளை வினியோகம் செய்யும் நகை கடையில் வேலை செய்யும் முகமது அசாருதீன் என்பவர்தான் இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிந்தது. தலைமுறைவாக உள்ள முகமது அசாருதீனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட 1 கிலோ 677 கிராம் தங்க நகை மற்றும் பணத்தை கோர்ட்டில் ஒப்படைப்போம். இது தொடர்பான உரிய ஆவணங்களை ராஜேஷ்குமார் ஜெயின் அளித்த பின்பே அவரிடம் நகைகள் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இந்த கொள்ளை வழக்கில் சிறப்பாக பணியாற்றி கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்