கோவையில் பயங்கர ஆயுதங்களுடன் தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் கைது - தப்பியோடிய இளம் பெண்ணுக்கு வலைவீச்சு
|தப்பி ஓடிய இளம்பெண் குறித்து விசாரணை செய்ததில் அவர்தான் அறையை முன்பதிவு செய்த அபி என்பது தெரியவந்தது.
கோவை,
கோவை கணபதி அருகே உள்ள உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 30). இவர் விளாங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி நள்ளிரவு விடுதிக்கு பெண் ஒருவர் வந்தார். அவர், உறவினர்கள் ஊரில் இருந்து வருவதாகவும் அவர்கள் தங்குவதற்கு அறை வேண்டும் என்றும் கேட்டார். இதையடுத்து அவருக்கு விடுதியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது. அறையை முன்பதிவு செய்தபோது தனது பெயர் லோகேஸ்வரி என்ற அபி (25) என்று தெரிவித்தார்.
இதையடுத்து வெளியே சென்ற அந்த பெண் சிறிது நேரத்தில் 3 பேருடன் விடுதிக்கு வந்தார். அதனைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் மேலும் சிலர் அந்த பெண்ணின் அறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் ஊழியர் விஷ்ணு, அந்த அறைக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த அறையில் 5-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். இதனால் அவர் அறைக்குள் சென்று 2 பேர் மட்டுமே தங்க வேண்டும். இல்லாவிட்டால் அறையை காலி செய்யுங்கள் என்று கூறினார். அப்போது அங்கிருந்தவர்கள் மிரட்டும் தோனியில் பேசியதாக தெரிகிறது. மேலும் அந்த அறையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அறையைவிட்டு வெளியே வந்துவிட்டார்.
தொடர்ந்து இதுகுறித்து விடுதி உரிமையாளருக்கும், பீளமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த அறையில் இருந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். ஆனாலும் ஒரு பெண் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து பிடிபட்ட சிறுமி உள்பட 6 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்றதுடன், அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பாளையம் லோகேஷ் (22), இமானுவேல் (21), சரவணம்பட்டி அப்துல் சமாத் (20), நவீன் சக்தி (20), ஒண்டிப்புதூர் ஆகாஷ் (20) மற்றும் 17 வயதான சிறுமி என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அனைவரும் கோவையில் உள்ள முக்கிய பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் வசதியானவர்கள் வசிக்கும் வீடுகளில் ஆயுதங்களை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் 17 வயதான சிறுமிக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய இளம்பெண் குறித்து விசாரணை செய்ததில் அவர்தான் அறையை முன்பதிவு செய்த அபி என்பது தெரியவந்தது. அவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இந்த கும்பலுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?, ஆர்.எஸ்.புரத்தில் வீட்டில் இருந்த 8 பேரை கட்டிப்போட்டு பணம்-நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் இந்த கும்பலுக்கு தொடர்பு உள்ளதா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.