திருநெல்வேலி
காரில் பெயிண்டர் கடத்தல்- 5 பேர் கைது
|காரில் பெயிண்டர் கடத்தல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செந்தில் ஆறுமுகம் (வயது 28). பெயிண்டர். இவர் வீட்டில் இருந்த போது ஒரு கும்பல் காரில் வந்தனர். அவர்கள் செந்தில் ஆறுமுகத்தின் தம்பி ஆட்டோ டிரைவர் முத்து பெருமாளை (24) தேடி வந்தனர். ஆனால் முத்து பெருமாள் வீட்டில் இல்லாததால், செந்தில் ஆறுமுகத்தை அந்த கும்பல் காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உஷார் அடைந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது மேலப்பாளையம் சந்தை பகுதியில் வந்த காரை தடுத்து நிறுத்தி செந்தில் ஆறுமுகத்தை மீட்டனர். மேலும் காரில் இருந்த கே.டி.சி. நகர் இசக்கிராஜா (32), ரெட்டியார்பட்டி தினேஷ் (26), சுரேஷ் (21), குலவணிகர்புரம் சபரிநாதன் (27), தங்கராஜ் (26) ஆகிய 5 பேரை பிடித்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பெண் விவகாரத்தில் இந்த கடத்தல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது தினேஷ் தரப்பினருக்கு தெரிந்த ஒரு பெண்ணை, முத்துபெருமாள் ஆட்டோவில் சவாரி அழைத்து சென்ற போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த பெண் தினேசிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்போனில் பேசி வாக்குவாதம் முற்றியதால், முத்துபெருமாள் மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த போது, அவருடைய அண்ணனை கடத்தி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.