சென்னை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
|சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்,
சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங்களை பாதுகாப்பு படையினா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர்.
வெடிகுண்டு நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்றனா். விமான நிலைய வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாா் ரோந்து வந்து கண்காணிக்கின்றனா். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தின் உள்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர்.
விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமலில் இருப்பதால் மேலும் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் பாஸ்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களுடன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடா்ந்து கண்காணிக்கப்பட உள்ளது.
விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை விமானங்களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் எடுத்து வரும் கைப்பைகளை 'ஸ்கேனிங்' மூலம் சோதனை செய்யப்படுகிறது.
பயணிகள் திரவப்பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. விமானங்களில் சரக்கு பாா்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து பல கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின்றன.
விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1½ மணி நேரம் முன்னதாகவும், சா்வதேச பயணிகள் 3½ மணி நேரத்துக்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா்.
சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.