< Back
மாநில செய்திகள்
சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி 5 லட்சம் கையெழுத்து இயக்கம்
அரியலூர்
மாநில செய்திகள்

சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி 5 லட்சம் கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
2 July 2023 12:00 AM IST

அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி 5 லட்சம் கையெழுத்து இயக்கம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 13-ந் தேதி நடைபெறுகிறது.

பொன்னேரி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ம.க. செய்தி தொடர்பாளரும், சமூக நீதிப்பேரவை தலைவருமான வக்கீல் பாலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் எனும் பொன்னேரியில் 1 கோடியே 52 லட்சத்து 14 ஆயிரத்து 941 கனமீட்டர் மண் படிந்துள்ளதாகவும், இதனை தூர்வாருவது மிக முக்கியம் எனவும் ஏரியின் வரத்து வாய்க்கால் 13 கிலோ மீட்டர், உபரிநீர் வடிகால் வாய்க்கால் 10 கிலோமீட்டர் வாய்க்காலை தூர்வாருதல், ஏரியின் கரைகளை சீரமைத்தல், மிகைநீர் போக்கியின் இரும்பு பலகைகளை மாற்றி அமைத்தல் மற்றும் ஏரியினை ஆழப்படுத்துதல் போன்ற பணிகளை செய்வதின் மூலம் சுற்றுவட்டாரத்தில் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மேன்மையடைய வாய்ப்புள்ளது.

கையெழுத்து இயக்கம்

9 மாதங்களுக்கு நீர் இருப்பு இருக்க வைத்தல், பூங்கா அமைத்தல், படகு சவாரி விடுதல், மீன் பாசி குத்தகை விடுதல் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு மேம்படுத்துதல் என கிராம பொருளாதாரம் மேம்பாடு பெற்று வளர்ச்சி அடையும். பொன்னேரியில் உள்ள மண்ணை கொண்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்டு ஆலைகள் எடுக்கும் சுரங்கங்களை நிரப்புதல் பணியினை மேற்கொள்ள ரூ.452.23 கோடி தேவைப்படுகிறது.

சோழகங்கம் எனும் பொன்னேரி ஏரியினை சீர் படுத்தும் பணிக்கு ரூ.662.73 கோடி தேவைப்படுகிறது. இந்த பணியினை வரும் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்த்து இடம்பெற செய்ய உள்ளதாக நீர்வளத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அன்புமணி ராமதாசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். சோழர் பாசன திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 13-ந் தேதி அரியலூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 5 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படுகிறது.

மதுக்கடைகளை மூட வேண்டும்

500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடுவதாக அறிவித்த நிலையில் பட்டியலை தேடி பார்த்த போது அரியலூர் மாவட்டத்தில் ஒரு கடையின் பெயர் கூட இடம் பெறவில்லை. முன்பே மூடிய கடைகளை தற்பொழுது ஒப்பிட்டு சொல்லக்கூடாது. வரும் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சத்துணவு பணியாளர் பதவிக்கு விதவைகள், ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆதரவற்றவர்களிடமிருந்தே ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேஷன் கடை கட்டிடம்

கோடாலி கிராமத்தில் ரேஷன் கடை கட்டிடம் அமைப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் 174 குடும்ப அட்டைதாரர்கள் மாவட்ட கலெக்டரிடம் குடும்ப அட்டையை சமர்ப்பித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு பொதுவான இடத்தில், பொதுமக்களுக்கு அருகே கட்டிடத்தை அமைக்க வேண்டும் என கூறி உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் 174 குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அன்புமணி ராமதாஸ் வருகையையொட்டி மாவட்ட செயலாளர் ரவிசங்கர், மாநில துணைத்தலைவர் ராமதாஸ், நகர செயலாளர் பரசுராமன் ஆகியோரை வக்கீல் பாலு சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்