சென்னை
தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு தவிக்கவிட்ட 5 மகள்கள்
|சென்னையில் தந்தையின் ரூ.2 கோடி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு 5 மகள்கள் தவிக்கவிட்டதாக முறையிட்ட முதியவரின் கண்ணீரை துடைக்கும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் புதன்கிழமை தோறும் பொதுமக்களையும், போலீசாரையும் நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு மனுக்கள் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வாறு வாங்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவு பிறப்பிக்கிறார். அந்த வகையில் அவர் புதன்கிழமையான நேற்று பொதுமக்கள் 18 பேரையும், 25 போலீசாரையும் சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.
அவர் சந்தித்த பொதுமக்களில் 84 வயது முதியவர் ராஜகோபால் கொடுத்த கண்ணீர் புகார் மனு அவரது நெஞ்சை வருத்தம் அடைய செய்தது. இவர் வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர். இவர் தனக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டுடன் கூடிய நிலத்தை தனது மகள்கள் 5 பேருக்கும் தானமாக எழுதி கொடுத்ததாகவும், தற்போது 5 மகள்களும், மருமகன்களும் தன்னை கவனிக்காமல் தவிக்கவிட்டு விட்டனர் என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தான் தானமாக எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் ராஜகோபால் தனது மனுவில் கூறியிருந்தார்.
முதியவர் ராஜகோபாலின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரது கண்ணீரை துடைக்கும்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர், ராஜகோபால் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு உதவும்படி கமிஷனர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.