< Back
மாநில செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

தினத்தந்தி
|
12 Sept 2023 11:38 AM IST

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளிடம் இருந்து 5 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிரபல ரவுடி கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் கடந்த 5-ந்தேதி ஆட்டோவில் ரவுடி எபினேசர்(வயது 31) சென்று கொண்டிருந்தார். அப்போது சிலர் திடீரென அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பித்து சென்றனர். எபினேசர் உடலை மீட்ட ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் கடந்த 7-ந்தேதி 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்கள் 5 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

வாக்குமூலம்

போலீசாரிடம் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

நாங்கள் 8 நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ேதாம். அதில் 2 நாட்டு வெடிகுண்டுகளை திருவள்ளூர் மாவட்டம், முதுகூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வீசி பயிற்சி எடுத்தோம். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு மட்டும் வெடித்தது. வெடிக்காத ஒரு நாட்டு வெடிகுண்டை அப்பகுதியிலேயே விட்டுச் சென்றுவிட்டோம்.

மீதமுள்ள 6 நாட்டு வெடி குண்டுகளை எபினேசரை கொலை செய்ய எடுத்து வந்து தாக்குதல் நடத்தினோம். அதில் 2 நாட்டு வெடிகுண்டுகளை மட்டும் உபயோகப்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டோம். மீதமுள்ள 4 நாட்டு வெடிகுண்டுகளை ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மேலப்பட்டு கிராமத்தில் தண்ணீரில் நனைத்து அங்குள்ள வயல்வெளியில் வீசிவிட்டு அங்கிருந்து பெங்களூரு சென்று விட்டோம். அதன்பிறகு கிருஷ்ணகிரியில் கோர்ட்டில் சரணடைந்தோம்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

இதையடுத்து தனிப்படை போலீசார் குற்றவாளிகள் அடையாளம் சொன்ன திருவள்ளூர் மாவட்டம் முதுகூர் காட்டுப்பகுதியில் இருந்த 1 நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.

பின்னர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மேலபட்டு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் 4 நாட்டு வெடிகுண்டுகளை அடையாளம் கண்டு மீட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தேடி வருவதோடு கொலையின் போது கொலையாளிகள் உபயோகப்படுத்திய சொகுசு காரை மீட்பதற்காக மற்றொரு தனிப்படையினர் பெங்களூரு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்