சென்னை
ராமாபுரத்தில் 5 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசம் - போலீசார் விசாரணை
|ராமாபுரத்தில் 5 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், கம்பர் சாலை பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தானது அருகே இருந்த 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் பரவியதில், தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பற்றி எரிந்து கொண்டிருந்த வீடுகளின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வீட்டில் இருந்த 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தீ விபத்தில் 5 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மேலும் தீயானது பரவி அருகே இருந்த தென்னை மரம் ஒன்றிலும் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.