பெரம்பலூர்
5 செ.மீ. உயர தெய்வ சிலைகளை வடிவமைக்கும் பெரம்பலூர் பட்டதாரி
|5 செ.மீ. உயர தெய்வ சிலைகளை பெரம்பலூர் பட்டதாரி வடிவமைத்துள்ளார்.
புவிசார் குறியீடு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் தழுதாழையில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் மரச்சிற்ப தொழிலை செய்து வருகின்றனர். இவர்கள் தேர், தெய்வ சிலைகள் மற்றும் அலங்கார கதவுகளை மரத்தில் வடிவமைத்து தருகின்றனர்.
இங்கு தயாரிக்கப்பட்ட மரச்சிற்பம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடத்தப்பட்ட கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அரும்பாவூர் மரச்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்கியது. மேலும் மத்திய அரசால் வழங்கப்படும் மாஸ்டர் கிராப்ட் பட்டம், தமிழக அரசின் தலைமை ஸ்தபதியால் வழங்கப்படும் தேர் ஸ்தபதி, தேர் சிற்பி பட்டங்களையும் இந்த கிராமத்தை சேர்ந்த சிற்பிகள் பலர் பெற்றுள்ளனர்.
5 செ.மீ. உயர தெய்வ சிலைகள்
இங்கு தேக்கு, இலுப்பை, வாகை, மாவிலிங்கை, கருங்காலி உள்ளிட்ட பல்வேறு மரங்களில் இருந்து தெய்வ சிலைகள், மரச்சிற்பங்களை வடிவமைத்து வருகின்றனர். தற்போது பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த பி.வி.ஏ. பட்டதாரியான மரச்சிற்பி சுவாமிநாதன் (வயது 37) பெரிய அளவிலான சிற்பங்களை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் சிறிய அளவிலான சுவாமி உருவங்களையும் தயார் செய்து வருகிறார்.
அதாவது விநாயகர், வராகி அம்மன் போன்ற சிலைகளை 5 செ.மீ. உயரத்தில் கருங்காலி மரத்தில் தயாரித்துள்ளது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த 5 செ.மீ. உயரமுள்ள சிலைகளை தயாரிப்பதற்கு 2 நாட்கள் முதல் 3 நாட்கள் வரை ஆகும். இந்த சிலைகளை ரூ.3 ஆயிரத்து 500 வரை விற்பதாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற சிறிய அளவிலான மர சிற்பங்களை தயாரித்து வரும் மரசிற்பி சுவாமிநாதனுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.