காஞ்சிபுரம்
வாலாஜாபாத் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
|வாலாஜாபாத் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொலை
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஜித் (வயது 25). போதைப் பழக்கத்திற்கு ஆளான அவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அஜித்தை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச்சென்று முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவப்பாக்கம் கிராம் ரெயில்வே பாதை அருகே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அஜித்தின் தலையை 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாங்கி கிராமத்தில் உள்ள கோவில் அருகே வீசிவிட்டு சென்று விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்தின் தலையையும், உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கைது
வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், திம்மராஜாம்பேட்டை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ், குமரன், ஆகியோர் வெளியூருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, விக்கிரவாண்டி அருகே போலீசாரை கண்டு தப்பி ஓடிய போது தவறி விழுந்ததில் விக்னேஷுக்கும், குமரனுக்கும் கை, கால்கள் உடைந்த நிலையில் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கட்டு போடப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூசிவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன், ஆதித்யா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பணம் கேட்டு தொந்தரவு
கைதான அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அஜித், நண்பர்களான இவர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், அவர்களின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பறித்துக்கொண்டு திருப்பி தராமல் அடிக்கடி தகராறு செய்வதும், தட்டிக்கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதுமாக இருந்துள்ளார். அதனால் அவர்கள் 5 பேரும் சேர்ந்து அஜித்தை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.