கன்னியாகுமரி
கடந்த 50 நாட்களில் 4,970 பேர் சொகுசு பயணம்
|கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் சொகுசு படகில் கடந்த 50 நாட்களில் 4,970 பேர் பயணம் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் சொகுசு படகில் கடந்த 50 நாட்களில் 4,970 பேர் பயணம் செய்துள்ளனர்.
வட்டக்கோட்டைக்கு சொகுசு படகு
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை இயக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மே மாதம் 24-ந் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு கடல் வழியாக உல்லாச படகு சவாரி தொடங்கியது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.450-ம், சாதாரண அறைகளில் பயணம் செய்வதற்கு ரூ.350-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு ஒரு சில நாட்கள் மட்டுமே வட்டக்கோட்டைக்கு இயக்கப்பட்டது. அதாவது கோடைவிடுமுறை சீசன் முடிவடைந்ததால் அதன் பிறகு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. அந்த சமயத்தில் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்படவில்லை. மேலும் கடல் சீற்றம் காரணமாகவும் இடை, இடையே படகு சேவை நிறுத்தப்பட்டது.
இதுவரை 4,970 பேர் பயணம்
இந்தநிலையில் தற்போது தொடர்ச்சியாக 3 நாட்கள் எந்தவித தடையுமின்றி வட்டக்கோட்டைக்கு செல்லும் படகில் ஏறி சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். படகு சவாரி தொடங்கிய மே மாதம் 24-ந் தேதி முதல் 50 நாட்களில் 4 ஆயிரத்து 970 பேர் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு பயணம் செய்துள்ளனர்.
கடந்த மே மாதம் குளிர்சாதன வசதி கொண்ட படகில் 531 பேரும், குளிர்சாதன வசதி இல்லாத படகில் 1,622 பேரும் பயணம் செய்துள்ளனர். ஜூன் மாதம் குளிர்சாதன வசதியுடைய படகில் 376 பேரும், குளிர்சாதன வசதி இல்லாத படகில் 2,173 பேரும் பயணம் செய்துள்ளனர். இந்த மாதம் நேற்று வரை குளிர்சாதன வசதி உடைய படகில் 37 பேரும், குளிர்சாதன வசதி இல்லாத படகில் 231 பேரும் பயணம் செய்துள்ளனர்.