கரூர்
நிதி நிறுவன அதிபர் வீட்டில் 49 பவுன் நகைகள் கொள்ளை
|கரூர் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் 49 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிதிநிறுவன அதிபர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர் தூத்துக்குடியில் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
ராஜேந்திரன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மதுரையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த ராஜேந்திரன் கடந்த மாதம் 29-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வேலை நிமித்தமாக தூத்துக்குடிக்கு சென்று விட்டார்.
49 பவுன் தங்கநகைகள் கொள்ளை
இந்தநிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து ஈசநத்தத்திற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த துணிகள் அனைத்து ஆங்காங்கே சிதறி கிடந்தன. ேமலும் பீரோவில் அவர் வைத்திருந்த 49 பவுன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
இந்த கொள்ளை குறித்து ராஜேந்திரன் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும், கரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தவாறு வெளியே ஓடி வந்து படுத்து கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.