< Back
மாநில செய்திகள்
4,718 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

4,718 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

தினத்தந்தி
|
23 March 2023 12:15 AM IST

பனப்பட்டி பகுதியில் 4,718 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

நெகமம்,

கிணத்துக்கடவு வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறையை சேர்ந்த ஒரு டாக்டர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு பராமரிப்பு உதவியாளர் என 3 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வந்தனர். கடந்த 1-ந் தேதி முதல் நாளை மறுநாளுக்குள் (சனிக்கிழமை) அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் பனப்பட்டி, அரசம்பாளையம், காரச்சேரி, சொலவம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 4,718 கால்நடைகளுக்கும் 22 நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி 100 சதவீதம் முடிந்து உள்ளது. இதுகுறித்து பனப்பட்டி கால்நடை மருத்துவர் பரமேஸ்வரன் கூறுகையில், பனப்பட்டி, சொலவம்பாளையம், காரச்சேரி, அரசம்பாளையம் கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் உள்ளதா என்று கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மேலும் விவசாயிகள் கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொண்ட போது, நோய் தாக்குதலுக்கான விவரங்களை கேட்டு அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்