46 ஆண்டுகாலம் இல்லாத அளவு, இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரிப்பு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
|46 ஆண்டுகாலம் இல்லாத அளவு, இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு,
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று நடைபெற்றது.
இதில், உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-
கரும்புக்கு கடந்த ஆட்சியில் டன்னுக்கு ரூ 2750 வரை கொடுத்த நிலையில், தற்போதைய ஆட்சியில், ரூ 2,950 என உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த தொகையை நான்கு ஆண்டுகளில் கொடுப்போம். கடந்த 10 ஆண்டுகளாக வழக்கப்படாமல் இருந்த கரும்பு நிலுவைத் தொகை முழுமையாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு அரவைத்தொகை மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 50 அதிகப்படுத்தி கொடுத்து வருகிறோம். கடந்த 46 ஆண்டுகாலம் இல்லாத அளவு, இந்த ஆண்டு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கொள்முதல் மையங்களில் திறந்த வெளியில் நெல்லினை வைக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நெல் மழையால் சேதமடைந்ததையடுத்து, உடனுக்குடன் கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து உடனுக்குடன் அரவைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால், தமிழகத்தில் 25 ஆயிரம் ஹெக்டேர் கூடுதலாக நெல் நடவு செய்யும் பணி நடக்கிறது. இந்த ஆட்சியில் உணவு உற்பத்தியை தேவைக்கு அதிகமாக செய்து கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.