திருவள்ளூர்
திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் 45 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ப்பு
|திருத்தணியில் வனத்துறையினரால் 45 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு அவற்றை தரம் குன்றிய காடுகளில் நட திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் குன்றிய வன பகுதிகளில்...
தேசிய வனக் கொள்கையின் படி தமிழ்நாட்டில் காடு மற்றும் மரங்களின் பரப்பளவை 33 சதவீதம் ஆக உயர்த்தும் நோக்கத்துடன் பசுமை தமிழ்நாடு திட்டம் 2021-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் தரம் குன்றிய காட்டுப் பகுதிகளில் புதிய உள்நாட்டு மரக்கன்றுகளை நட்டு மேம்படுத்துவதாகும்.
மாவட்ட வன அலுவலர் ராம் மோகன் ஆகியோர் உத்தரவின் பேரில் திருத்தணி வன சரகத்திற்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமராக்கள் மூலம் காடுகளில் உள்ள மரங்களின் அடர்த்தியை படம் பிடித்து ஆய்வு செய்தனர். ஆய்வில் தரம் குன்றிய வன பகுதிகளில் புதிய மரக்கன்றுகள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
45 ஆயிரம் மரக்கன்றுகள்
இந்த திட்டங்களுக்கு தேவையான, நாற்று, மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய, வனச்சரகங்களில் போதிய இடம் மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால் திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் குத்தகைக்கு நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி வன சரகர் அருள்நாதன் தெரிவித்ததாவது:-
பசுமை தமிழ்நாடு இயக்கம், பல்லுயிர் பாதுகாப்பு பசுமை இயக்கம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் 45 ஆயிரம் மரக்கன்றுகள் கன்னிகாபுரம் பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தேக்கு, செம்மரம், நீர்மத்தி, இலுப்பை, நெல்லி, புளியமரம் உள்ளிட்ட வகையான செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த மரக்கன்றுகளை வருகின்ற ஜூலை மாதம் திருத்தணி வனசரகத்தில் தரம் குன்றிய காடுகளில் புதிய மரக்கன்றுகள் நட்டு வனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த பண்ணைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.