பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் கடந்த ஓராண்டில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி
|கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும், மின்னகத்தில் 10.50 லட்சம் புகார் பெறப்பட்டு அதில் 90% புகார்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மின்னகத்தில் வரப்பெற்ற புகார்கள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 234 தொகுதிகளிலும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு புதிய திட்டங்கள் நிறைவேற்றுதல் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதி மக்களிடம் பேசி கோரிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் கருத்துக் கேட்க வேண்டும் எனச் சிறப்பு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 28 ஆயிரத்து 85 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மின்சாரத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 1 யூனிட் கூட வீணடிக்காமல் உற்பத்தி செய்த மின்சாரம் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனச் சூரிய மின் உற்பத்தியாளர்கள், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கடந்த ஓராண்டில் சிக்கன நடவடிக்கையால் மின்வாரியத்தில் 2700 கோடி வட்டி சேமிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
மேலும், டாஸ்மாக் பார் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளிப்படையாக உள்ளது எனத் தெரிவித்த அவர், ஒப்பந்தப்புள்ளியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அனைவருக்கும் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த டெண்டர் தொடர்பாக எந்த இடத்திலும் புகார்கள் இல்லை.
தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசி தவறான முறையில் கருத்தை வெளியிடுகின்றனர். தவறுகள் நடைபெற்றால் கவனத்திற்குக் கொண்டு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஓராண்டில் பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது எனக் கூறினார்.