< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி

தினத்தந்தி
|
21 July 2022 7:28 PM GMT

பள்ளிக்கல்வி துறை சார்பில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது.

செஸ் போட்டி

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய அளவில் கீழப்பழுவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மருதமுத்து ஆகியோர் கலந்து கொண்டு செஸ் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டிகளில் திருமானூர் ஒன்றியத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 239 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவ-மாணவிகள் 14 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 17 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 18 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர். செஸ் போட்டிகள் அனைத்தும் தேசிய சதுரங்க போட்டி குழுவின் நடுவரான பிரவீன் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி நன்றி கூறினார்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான செஸ் போட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 198 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றிபெற்ற 18 பேர் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்வார்கள்.

செஸ்போட்டியில் சோழங்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளி 9 மற்றும் 10-ம் வகுப்பு பெண்கள் பிரிவில் அகல்யா முதலிடமும், ஆண்கள் பிரிவில் சஞ்சய்குமார், பெண்கள் பிரிவில் சந்தியா ஆகியோர் 2-வது இடம் பிடித்தனர். 6 முதல் 8-ம் வகுப்பு ஆண்கள் பிரிவில் குமணன் 3-வது இடம் பிடித்தார். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

விக்கிரமங்கலம் அரசு பள்ளி

விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் ஒன்றிய அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் தா.பழூர் ஒன்றிய அளவிலான 29 பள்ளிகளில் இருந்து 171 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் ஒரு பிரிவு என 3 பிரிவுகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 4 சுற்றுகள் நடத்தப்பட்டு இறுதியில் வெற்றி பெற்ற 18 பேருக்கு பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தநிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்