< Back
மாநில செய்திகள்
விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை

தினத்தந்தி
|
7 Oct 2022 3:19 PM IST

4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா

சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 300 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து பூங்காவில் உள்ள காண்டாமிருகம், நீர்யானை, சிங்கம், புலி, யானை, வெள்ளைப்புலி, மனித குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளை பார்த்து ரசித்தனர்.

44 ஆயிரம் பேர் வருகை

இதனால் பூங்காவில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பூங்காவில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிறந்த ஆதித்யா என்ற ஒரு வயதான ஆண் மனித குரங்கு குட்டி தனது தாயுடன் அதனுடைய இருப்பிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல் சறுக்கு மரம் போன்றவற்றில் ஏறி இறங்கி செய்யும் சேட்டைகளை பூங்காவுக்கு வந்த குழந்தைகள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று ரசித்துப் பார்த்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

பார்வையாளர்கள் ஏமாற்றம்

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா கூறியதாவது:-

தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி அன்று 18 ஆயிரம் பேர் பூங்காவுக்கு வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை 9 ஆயிரம் பேரும் ஆயுத பூஜை, விஜயதசமி என்று தலா 8,500 பேரும் என மொத்தம் தொடர் விடுமுறை 4 நாட்களில் 44 ஆயிரம் பேர் வண்டலூர் உயிரியல் பூங்காவை சுற்றி பார்த்தனர். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பூங்கா சார்பில் செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் அவர் கூறுகையில்:- விலங்குகள் பரிமாற்றதிட்டத்தின் வெளிமாநில பூங்காவில் இருந்து வரிகுதிரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது இன்னும் 3 மாதங்களில் வரிக்குதிரை கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்