< Back
மாநில செய்திகள்
கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் துணிகரம் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை
மாநில செய்திகள்

கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் துணிகரம் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை

தினத்தந்தி
|
14 July 2022 3:30 AM IST

சென்னை கீழ்ப்பாக்கம் ஜெயின் கோவிலில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை போய்விட்டது. கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம், ரங்கநாதன் அவென்யூவில் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலின் துணை தலைவர் கிம்ராஜ் (வயது 50). இவருடைய மனைவி மீனா, தினமும் தனது வீட்டில் இருந்து தங்க தட்டு, விசிறி, குவளை போன்ற பூஜை பொருட்களை கொண்டு வந்து பூஜை செய்வார்.

இதேபோல நேற்று காலை மீனா தங்க பூஜை பொருட்களை தனது வீட்டில் இருந்து கொண்டு வந்து பூஜை செய்தார். பூஜை முடிந்தவுடன் தங்க பூஜை பொருட்களை ஒரு பையில் போட்டு ஓரமாக வைத்தார். பின்னர் கோவிலை 3 முறை சுற்றி வந்து சாமி கும்பிட்டார்.

பூஜை பொருட்கள் கொள்ளை

3 முறை சுற்றி வந்தவுடன் தங்க பூஜை பொருட்கள் உள்ள பையை எடுக்க வந்தார். ஆனால் அதை காணவில்லை. மர்ம நபர் ஒருவர் அவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக கீழ்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் 44 பவுன் தங்க பூஜை பொருட்கள் கொள்ளை போய் விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கோவில் கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர் ஒருவர் தங்க பூஜை பொருட்கள் அடங்கிய பையை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அந்த மர்ம நபர் யார்? என்று போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்