< Back
மாநில செய்திகள்
மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன

தினத்தந்தி
|
8 Nov 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டன.

கண்டாச்சிமங்கலம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்துமனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 438 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கலெக்டர் ஷ்ரவன்குமார் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யு.டி.ஐ.டி. கார்டு) மூலமாக அரசு உதவிகள் வழங்கப்படவுள்ளது. எனவே, அடையாள அட்டை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகள் அனைவரும் புத்தக வடிவிலான அடையாள அட்டையின் நகல்கள், ஆதார் அட்டை நகல், புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார். தொடர்ந்து அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ரத்தினமாலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்