மதுரை வைகையாற்றில் வெள்ளம் - போக்குவரத்து துண்டிப்பு!
|தென்கரை வடகரையில் உள்ள சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.யானைக்கல் தரைப்பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கின.
மதுரை,
கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி
தேனி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை, பொம்மராஜபுரம், போடி, உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து நேற்று காலை முதல் படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று காலையில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணி அளவில் 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் ஏற்கனவே 70 அடியாக இருந்த நிலையில், அணைக்கு வந்த நீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்பட்டது.
தற்போது நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. வைகை அணையின் பிரதான 7 மதகுகள் வழியாகவும், 7 சிறிய மதகுகள் வழியாகவும் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது.
இன்று காலை நிலவரப்படி வைகையாற்றில் 4,300 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதால், வைகை அணை முன்பாக இரண்டு கரைகளையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
மதுரை
7 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் தென்கரை வடகரையில் உள்ள சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.யானைக்கல் தரைப்பாலம், இணைப்பு சாலை தண்ணீரில் மூழ்கின.இதையொட்டி பாதுகாப்பு கருதி அந்த தரைப்பாலம் மூடப்பட்டது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வைகை அணையில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.