< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

சென்னையில் இருந்து 4.30 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

தினத்தந்தி
|
10 Nov 2023 10:43 PM IST

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 9-ந்தேதி முதல் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களை விட 1,895 சிறப்பு பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சென்னையில் இருந்து கடந்த வியாழன் கிழமை முதலே ஏராளமானோர் பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்துடன் மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பஸ் நிறுத்தம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நிலையத்தில் இருந்தும் பஸ்கள் இயக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலும் இருந்து தென்மாவட்ட மக்கள் பயணிக்கும் வகையில் பஸ்கள் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கடந்த 9-ந்தேதி முதல் வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பஸ்களை விட 1,895 சிறப்பு பஸ்கள் வரை கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 9-ந்தேதி 2 ஆயிரத்து 734 பஸ்கள் இயக்கப்பட்டது. இதேபோல, இன்றும் பஸ்களில் பயணிக்க காலை முதலே பஸ் நிலையங்களுக்கு பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கோயம்பேட்டு முதல் பெங்களத்தூர் வரையில் இன்று மாலை வழக்கத்தைவிட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து சென்றது. கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வரவேண்டிய காலதாமதாகவே வந்தது.

இதேபோல, கோயம்பேடு பஸ் நிலையத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பயணிகளின் உடமைகள் மற்றும் பஸ்களில் பட்டாசு எடுத்து செல்வதை தவிர்க்கும் வகையில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், டிரோன் மற்றும் கண்காணிப்பு கேமரா உதவியுடனும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பஸ் நிலையங்களை சுற்றி தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பஸ் நிலையங்களின் முகப்பு பகுதியில் பயணிகள் எளிதில் பஸ்களை அடையாளம் காணும் வகையில் அறிவிப்பு பலகைகளும் வகைக்கப்பட்டது. அரசு பஸ்களை போலவே ஆம்னி பஸ்களிலும் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமில்லாமல் முன்பதிவு செய்யாத பயணிகளும் பயணித்தனர். ஆம்னி பஸ்களில் விதிமீறல்களைக் கண்காணிக்க வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுக்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்