சென்னை விமான நிலையத்தில் 43 சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம்
|நிர்வாக காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்தில் 43 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், துறைமுகம், சரக்கக பிரிவு ஆகியவற்றில் பணியாற்றிய சுங்க இலாகா துணை கமிஷனர்கள் 13 பேர் மற்றும் உதவி கமிஷனர்கள் 30 பேரை இடமாற்றம் செய்து சென்னை சுங்க இலாகா துறை தலைமை அலுவலக கூடுதல் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி துறைமுகத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கும், சென்னை விமான நிலையத்தில் இருந்து துறைமுகம் மற்றும் சரக்கக பிரிவுக்கும், சரக்கக ஏற்றுமதி பிரிவில் இருந்தவர்கள் இறக்குமதி பிரிவுக்கும், இறக்குமதி பிரிவில் இருந்தவர்கள் ஏற்றுமதி பிரிவு மற்றும் விமான நிலைய கொரியர் அலுவலகம், போதை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சுங்க இலாகா அதிகாரிகள் இடமாற்றம் வழக்கமாக நடக்கும் பொதுவான ஒன்று தான். ஒரே இடத்தில் அதிக நாட்கள் பணியாற்றுவதை தவிா்ப்பதற்காகவும், நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.