விழுப்புரம்
மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 427 மனுக்கள் பெறப்பட்டன
|விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 427 மனுக்கள் பெறப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 427 பேர் மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை உதவி இயக்குனர் சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.