செங்கல்பட்டு
மறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் 42 பவுன் நகை திருட்டு
|மறைமலைநகர் அருகே கல்லூரி பேராசிரியை வீட்டில் 42 பவுன் நகை திருடப்பட்டது.
வீட்டின் பூட்டு உடைப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கீழக்கரணை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் புனித மலர் (வயது 37), இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பில்டிங் காண்ட்ராக்டரான இவரது கணவர் பணி நிமித்தமாக வெளியூர் சென்றார்.இதனால் வீட்டை பூட்டிக்கொண்டு புனித மலர் வேளச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புனிதமலர் வீட்டின் அருகே உள்ள வர்கள் உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவித்தனர். உடனடியாக வேளச்சேரியில் இருந்து விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு புனிதமலர் அதிர்ச்சி அடைந்தார்.
நகை- பணம் திருட்டு
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 42 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து பேராசிரியை புனிதமலர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாக காட்சிகள் அடிப்படையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.