< Back
மாநில செய்திகள்
418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்டது: அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை
மாநில செய்திகள்

418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்டது: அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வருகை

தினத்தந்தி
|
17 Sept 2022 12:06 AM IST

மிக கடினமான சூழல்களில் செயல்படும் ‘மிட்ஜெட்' எனும் அமெரிக்க போர்க்கப்பல் சென்னை வந்தது. இந்த கப்பல் 418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்டதாகும்.

சென்னை,

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான 'மிட்ஜெட்' எனப்படும் போர்க்கப்பல் நேற்று சென்னை துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பல் அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல்களில் மிகப்பெரியதும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டதும் ஆகும். அமெரிக்க கடலோர காவல்படையின் முக்கிய அங்கமாக திகழும் இந்த கப்பல் சவாலான செயல்பாடுகளில் ஈடுபடும் திறன் கொண்டது.

ஆளில்லா வான்வழி வாகனங்களுக்கான தளத்தையும், மிக கடினமான கடல் சூழல்களில் செயல்படும் திறனையும் இந்த கப்பல் கொண்டுள்ளது.

418 அடி நீளம்

வலுவான கட்டுப்பாட்டு அமைப்பு, அதிநவீன தகவல் தொடர்பு வசதிகள், கணினி, நுண்ணறிவு, கண்காணிப்பு மற்றும் நவீன உபகரணங்களை இந்த கப்பல் கொண்டுள்ளது. 418 அடி நீளம், 54 அடி உயரம் கொண்ட இந்த கப்பலுடன் 23 அதிகாரிகள், 120 மாலுமிகளும் வந்துள்ளனர்.

இந்த கப்பலை சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவின் வரவேற்றார்.

உறவை வலுவாக்கும்

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத்தூதர் ஜூடித்ரேவின் கூறும்போது, 'இந்தோ பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்குதாரராக இந்தியா திகழ்கிறது. மிட்ஜெட்டின் சென்னை பயணம் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டு செயல்பாடுகள், சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான இந்தோ பசிபிக் பகுதிக்கான லட்சியத்தை நோக்கிய நமது உறவை மேலும் வலுவாக்கும் என நம்புகிறேன்' என்றார்.

இந்த கப்பல் 19-ந் தேதி வரை சென்னையில் நிறுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்