புதுக்கோட்டை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன
|புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 412 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வருபவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதாகவும்' இதனை மாற்றி தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என தொிவித்திருந்தனர்.
மணமேல்குடியை சேர்ந்த கர்ப்பிணி பசிரா பானு, தனது கணவர் சேர்ந்து வாழ மறுப்பதாகவும், அவருடன் சேர்த்து வைக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி மனு அளிக்க வைத்தனர்.
படிக்க உதவி செய்யக்கோரி...
புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் அருகே உள்ள ராஜாபட்டியை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு தாரணி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். தாரணி பிளஸ்-2 வகுப்பும், மணிகண்டன் 9-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் டிரைவர் வேலை செய்து வந்த அன்பரசன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். மகள், மகனின் கல்வி பாதியில் நிற்காமல் தொடர்ந்து படிக்க உதவி செய்ய கோரி வீரம்மாள் தனது குழந்தைகளுடன் வந்து மனு அளித்தார்.
நலத்திட்ட உதவிகள்...
இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு எலக்ட்ரானிக் முறையில் பிரெய்லி எழுத்துக்களில் படிப்பதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பிரெய்லி ரீடர் கருவியினை 4 பேருக்கு அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செய்யது முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.