திருச்சி
வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வை 407 பேர் எழுதினர்
|வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வை 407 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு வன சார்நிலைப்பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுனர் (தொகுதி-4) பதவிகளுக்கான போட்டித்தேர்வு நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 2,486 பேர் தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். தேர்வாளர்கள் செல்போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களையும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை. இந்த தேர்வை மொத்தமுள்ள 2,486 பேரில் 407 பேர் மட்டுமே எழுதினர். 2,081 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதாவது 16.37 சதவீதம் பேர் மட்டுமே தேர்வெழுதினர். மீதம் 83.71 சதவீதம் பேர் வரவில்லை.
இதேபோல் திருச்சி மாவட்டத்தில் நேற்று நடந்த கிராம உதவியாளர் நியமனத்துக்கான எழுத்துத்தேர்வுக்கு 10,363 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் 8,375 பேர் தேர்வு எழுதினர். 1,988 பேர் தேர்வுக்கு வரவில்லை. முன்னதாக வனத்தொழில் பழகுனர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய 2 தேர்வுகளும் நடைபெற்ற மையங்களில் கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.