காஞ்சிபுரம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம்
|பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம் நடந்தது.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளிவிமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி போன்ற கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் என்று கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 400-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் ஊர் மைதானத்தில் ஒன்றுகூடி கண்ணில் கருப்புக்கொடி கட்டிக்கொண்டு, கைகளில் கருப்பு கொடி ஏந்தியும், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
400-வது நாளாக நடந்த தொடர் போராட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் என கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.